நீட் தேர்விற்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லையா? நெருங்கும் இறுதி நாள் - NTA வெளியிட்ட முக்கிய அறிவுரை
2025-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு தேசிய அளவில் வரும் மே 4-ம் தேதி ஒரே கட்டமாக தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்களே அவகாசம் உள்ளது. மாணவர்கள் கடைசி நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை தவிர்க்க விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாகும். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் அதிவு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கியது. வரும் மார்ச் 7-ம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்நிலையில், கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வண்ணம், விரைந்து விண்ணப்பப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே 4- தேதி நீட் தேர்வு
தேசிய அளவில் மே 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்வு நடைபெற உள்ளது. இந்தாண்டு, ஓ.எம்.ஆர் முறையில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படும்.
நீட் தேர்வு 2025 விண்ணப்பப் பதிவு
நீட் தேர்விற்கு விண்ணப்பப் பதிவு https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
படி 1 : https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : முகப்பு பக்கத்தில் “Registration for NEET(UG)-2025 is LIVE” என்று இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
படி 3 : தொடர்ந்து ஒரு பக்கம் திறக்கும். அதில் New Registration என்று கொடுத்து பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
படி 4 : விண்ணப்பத்தில் தேர்வு மையங்களை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- மாணவர்களின் சரியான இமெயில் முகவரி
- செல்போன் எண்
- 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழ்
- 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- ஆதார் எண்
- பெற்றோர்களின் பெயர்கள்
- மாணவர்களின் புகைப்படம்
- மாணவர்களின் கையொப்பம்
- மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவையிருப்பின்)
- கட்டைவிரல் பதிவு
நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணம்
இளநிலை நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவின் ரூ.1,700 கட்டணமாக செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.1,600 மற்றும் எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.1000 செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து எழுதுபவர்களுக்கு ரூ.9,500 ஆகும்.
நீட் தேர்வு முறை
இந்தாண்டு நீட் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் Section A மற்றும் Section B என அமைக்கப்பட்டு இருக்கும். இந்தாண்டு முதல் Section B என்பது நீக்கப்படுகிறது. எனவே கேட்கப்படும் 180 கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இயற்பியலில் 45 கேள்விகள், வேதியியலில் 45 கேள்விகள் மற்றும் உயிரியலில் 90 என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மேலும், தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கு மட்டுமே தேர்வு நடைபெறும்.
